மக்கள் பலர் தமது கருத்தினைக் காது கொடுத்துக் கேட்கிறார்கள் என்பதே அவரது களைப்புக்கு மருந்து. அவர்கள் தமது கொள்கையைச் சிந்திக்கின்றார்கள் – ஏற்க முற்படுகிறார்கள் என்பதே அவருக்குத தேன். அதுவே அவரது முதுமையில் அவர் பருகிய இளமையின் பால்.
பெரியார் அவர்களிடம் பழகியவர்கள் அறிந்தது இது. தம்முடன் உரையாடுவோரைக் கூர்ந்து கவனிப்பார். அவர்தம் உரையையும் காதுகொடுத்துக் கேட்பார். அவரது சிந்தனை தம்முடன் பேசுவோரையும் அவரது எண்ணத்தையும் ஆராயும். ஒருவர் ஏன் அப்படிப்பட்ட கருத்தைக் கூறுகிறார் என்பதை அவர் ஆழ்ந்து சிந்திப்பதை அவரது துருவிப்பார்க்கும் கண்கள் புலப்படுத்தும்.
தம்மிடம் உரையாடுவோர், ஏதேனும் ஒரு முடிவான கொள்கையில் தம்மை ஒப்படைத்துக் கொண்டவர் என்று தோன்றுமானால், அவருக்குள்ள இலட்சியம் அவருக்கு – நமக்குள்ள இலட்சியம் நமக்கு என்று உள்ளங்கொண்டு, அவரிடம் அதிகம் வாதாடத் தலைபடமாட்டார். அவர்கள் மாறுபட்ட கொள்கையுடையவாராயினும், ஏதேனும் ஒருவகையில் சமுதாயத்துக்குப் பயன்படுவர்களானால், அவர்கட்கு உரிய மதிப்பினை வழங்கிப் பாராட்டுதல் செய்து, தனிப்பட்ட முறையில் அவர்களுடன் மாறுபாடு இல்லை, கொள்கையிலேதான் மாறுபாடு என்பதை அவர்கள் உணருமாறு செய்திடுவது அவரது இயல்பு. அவர்களையெல்லாம் தம்முடைய பண்பாட்டினாலேயே பெரிதும் கவர்ந்தவர் தந்தைப் பெரியார்.
பெரியார் அவர்கள் எதையும் சாத்திரம் சம்பிரதாயம் என்றோ, முன்னோர் உரைத்தது என்றோ, மக்கள் நம்பிக்கை என்றோ ஏற்பதில்லை. உண்மை, நியாயம், தேவை, மக்களுக்குப் பயன்தருவது என்று உறுதியாகத் தெரிந்தால்தான் ஏற்பார். அதுவே, அவரது தனித் தன்மை வாய்ந்த சிந்தைனையாக வளர்ந்து, உரையாகி, எழுத்தாகி, அவரது குறிக்கோள் ஆகவே வடிவு கொண்டது.
மக்கள் உள்ளத்தில் பதிந்துள்ள பழமையான எண்ணங்களை எல்லாம், பழைய பொன் நகையை உருக்கித் தூய பொன்னாக்கிப் புது அணி செய்ய முற்படுவதுபோன்று, ஆராய்ந்து புதய மதிப்பீடு செய்யலானார்.
மனிதன் – மனித்த் தன்மை பெற, பகுத்தறியும் ஆற்றல் பெற, சமத்துவ சகோதரத்துவ சுதந்திரத் தகுதிபெற, தன்மானம் இழக்காது வாழ, எவை எவை எப்படி எப்படித் தடையாயினும் அவற்றைத் தகர்த்து எறிவதே அவருடைய குறிக்கோள்.
சாதி, குலம், உயர்வு, தாழ்வு, பார்ப்பனியம், புரோகிதம், சடங்குகள், மத நம்பிக்கை, தலைவிதி த்த்துவம், கோயில் வழிபாடு – கடவுள் நம்பிக்கை, மறுபிறவு, மோட்சம் – நரகம் முதலான அனைத்தும் அவரது பகுத்தறிவுக் கேள்விக் கணைகளால் தூளாக்கப்பட்டன.
Leave a Reply